ஏனாம் பகுதி கூலி
உயர்வு போராட்டம் – வன்முறை – கொலை
ஏனாம் பகுதி புதுசேரி யூனியன் பிரதேசத்தின் ஆந்திராவை ஒட்டிய ஒரு தொகுதி.
வரி சலுகைகளுக்காக அனேக பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் யூனியன் பிரதேசங்களில் தமது
தொழில் நிறுவனங்களை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகின்றன. இந்த வகையில்
ரீஜென்சி டைல்ஸ் என்ற நிறுவனம் திரு. ஜி.என்.நாயுடு என்பவரால் 1983 ல்
ஆரம்பிக்கப்பட்டு நல்ல முறையில் இன்னும் பல எஞ்சினியரிங் கல்வி நிறுவனங்களுடன்
நடைபெற்று வருகிறது. ஆனாலும் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த நிறுவனம்
ரூபாய் 10 மதிப்பில் வெளியிடப்பட்ட முகமதிப்பிலிருந்து சரிவடைந்து தற்போது ரூ4.25
என்ற அளவிலேயே உள்ளது.
எல்லா நிறுவனங்களும் கூப்பாடு போடும் அதே கூலி உயர்வு பிரச்சினை இந்த
நிறுவனத்திலும் ஆரம்பமாகியது. தொழிற்சங்கங்களுடன் நடத்திய பல சுற்று பேச்சு
வார்த்தைகள் தோல்வியடைந்து வேலை நிறுத்த போராட்டம் மறியல் போராட்டம் என்று
வளர்ச்சி பெற்றது. நிர்வாகங்களுக்கு அடுத்த கட்ட போக்கிடம் காவல் துறைதான்.
அதிலும் தனியார் துறை என்றால் காவல் துறை கூட தனிகவனம் செலுத்துவது இயல்பாகி
போயிருக்கிறது. மறியல் செய்தவர்களை காவல் நிலையத்துக்கு பேச்சு வார்த்தைக்கு
அழைத்து சென்ற காவல் துறையால் பக்குவமான அணுகுமுறை தவறியதால் ஏற்பட்ட குழப்பம்
தொழிற் சங்க தலைவரின் அகால மரணத்திற்கு வழி வகுத்திருக்கிறது. தலைவரின் உயிர்
பறிக்கப்பட்ட சம்பவம் ஏற்கனவே கொதிப்பில்
இருந்த தொழிலாளர் மற்றும் தலத்திலுள்ள சமுதாய மக்களிடையே மேலும் வெறி ஏற்றியது.
விளைவு, தங்களால் உருவாக்கப்பட்ட தொழிற்சாலை சின்னா பின்னமாகியது. தொழிற்சாலையை
கவனித்து வந்த, நிறுவனரின் குடும்ப உறுப்பினராகிய அதன் தலைவரும், கலவரகாரர்களால்
அராஜகமான முறையில் தாக்கி கொல்லப்பட்டுள்ளார். தொழிற்சங்க வரலாற்றில் மிகவும்
துக்ககரமான நாளாக கருதவேண்டிய பதிவுகளை உள்ளடக்கிய நாளாக கழிந்து போய் விட்டது.
அரசாங்கத்தை பொருத்த அளவிலும் சரி தனியார் துறையானாலும் கொத்தனார், பிளம்பர் போன்ற
தொழிலாளர்களாகட்டும் இன்றைய தினம் சம்பள உயர்வு என்பது ஒரு இமாலய பிரச்சினையாகவே
கையாளப்படுகிறது. சம்பள உயர்வு கேட்பது கூட கெட்ட ஒரு செயலாகவே கையாளப்படுகிறது. பல
சுற்று பேச்சு வார்த்தைகளும் போராட்டங்களும் வேலையிழப்புகளும் பழிவாங்கும் படலமும்
பல நிறுவனங்களின் தொடர் கதையாகிப் போய் விட்டது. முதலாளிகளின் தறுதலை போக்கும்
ஊதாரி முடிவுகளும், அரசாங்க கொள்கை முடிவுகளால் தடுமாறும் அரசு நிறுவனங்களும் தமது
எத்தகைய போக்கையும் மாற்ற முயற்ச்சிக்காமல் முதலில் கை வைப்பது ஆட் குறைப்பும்,
கூலி உயர்வை மறுப்பதும் ஆகும்.
எல்லா நிறுவனங்களுக்கும் தகுதியான நல்ல கல்வியில் திறம் பெற்ற ஊழியர்கள்
வேண்டும். ஆனால் அவர் வேலையில் சேர்ந்த்ததும் முழு உழைப்பையும் குறிப்பிட்ட
நிறுவனத்துக்கு மட்டுமே வழங்க முடியும். சமூக பொருளாதார காரணிகள் ஏற்படுத்தும்
குடும்ப நெருக்கடிகளுக்கு அவரது சம்பளத்துக்கு உள்ளாகவே தீர்வு காண வேண்டும்.
எல்லாவற்றிலுல் மேலாக தனது அடுத்த தலைமுறையை சிறந்த முறையில் உருவாக்க வேண்டிய
நிர்பந்தம். எந்த கணத்திலும் வேலையிழப்பை சந்த்தித்தாலும் அடுத்த கட்டத்திற்கு
தயாராக முடியாத நிலை. இன்றைய அரசு தனது கொள்கைகளால் ஒரு புறம் ஓய்வு ஊதியம் இல்லாத
ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளதென்றால் ஊடகங்களும் சமூகமும் அளவுக்கு அதிகமும்
பன்னாட்டு நாகரீகத்தையும் பின்பற்றும் சமூக உணர்வை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவம்
இன்று அதிக விலை, ஆரம்ப கல்வி தொட்டு அனைத்தும் எட்டா உயரத்தில். இதில் சம்பளம்
அல்லது கூலி வாங்குவோர் நிலை ஒன்றும் சொர்க்க புரியல்ல. மூலதனம் உழைப்பு என்ற
மிகப்பெரிய காரணியால் தான் பலுகி பெறுக முடிகிறது. அதில் உழைப்பவரை புறந்தள்ளி
மூலதன குவிப்பு நடைபெறுமானால் அதன் விழைவு ரீஜென்சி டைல்ஸ் நிறுவனம் சந்தித்ததாகவே
இருக்கும். ஆனால் இது மிக மோசமானது.
இதனால் பாதிக்கப்படுவது இரு தரப்பு மட்டுமல்ல, தேசத்தின் முகவரியும் கூட.
இன்னும் கெட்டுவிடவில்லை. இது அபாயத்தின் முதல் மணியாக கொள்வோம். போலியான வாழ்க்கை
முறைகளை கற்று கொடுக்கும் ஊடகங்கள் தங்கள் பங்களிப்பில் ஜாக்கிரதையாக
இருக்கட்டும். அரசு கல்வியையும், மருத்துவத்தையும், எளிதாக எல்லோரும்
பெற்றுக்கொள்ள வழி செய்ய வேண்டும். பாதுகாப்பான ஓய்வு காலம் எல்லோரும் பெற திட்டம்
வேண்டும். அன்றாடம் உயரும் எல்லா விலைவாசிகளும் கட்டுப் படுத்த பட வேண்டும். பணம்
ஒன்றே பிரதானம் என்ற எண்ணம் பிறப்பு முதல் இறப்பு வரை இருக்கும் நிலையை மாற்றினால்
மட்டுமே கூலி உயர்வு என்ற பிரச்சினைக்கு நிர்வாகமும் அதற்கு இசைவாக நடக்கும்
அரசும் தீர்வு காண முடியும். இல்லையென்றால் இப்போது இருக்கும் தகவல் தொழில் நுட்ப
யுகத்தில் அன்னிய நாடுகள் தற்போது சந்திக்கும் மக்கள் புரட்சி இந்தியாவிலும் ஏற்பட
அதிக தூரமில்லை. அதனால் ஏற்படும் விளைவுகள் அனைவரும் மகிழதக்கதாக இருக்காது என்பதே
உண்மை. நாகரீகம் என்பது உணர்வு கலாசாரமில்லை. சமாதானமான உணர்வு பூர்வமான உறவுகளை
உள்ளடக்கி அவரவர் பூர்விக வாழ்வில் மகிழ்ந்து கொண்டாடுவதாக இருக்கட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக